ECONOMYNATIONALSELANGOR

சமையல் எண்ணெய்க்கு இரு வேறு விலை நிர்ணயம்- அமைச்சு பரிசீலனை

கோலாலம்பூர், மார்ச் 16-  உள்நாட்டு பயனீடு மற்றும் ஏற்றுமதி என இருவேறு விலைகளைச் சமையல் எண்ணெய்க்கு நிர்ணயிப்பது குறித்து உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு பரிசீலித்து வருகிறது.

உதவித் தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெய்  சரியான தரப்பினருக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

நடப்பு முறைக்கு மாற்றாக வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.  சமையல் எண்ணெய் விலையை நடப்பு முறைக்கு மாற்றாக இரு விதமாக அதாவது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப நிர்ணயிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.

மக்களவையில் நேற்று மாமன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சமையல் எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அந்த உணவுப் பொருளுக்கான உதவித் தொகையை 190 கோடி வெள்ளியாக அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.

உதவித் தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெயை வாங்குவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்துக் கருத்துரைத்த அவர், தகுதி உள்ள தரப்பினர் மட்டுமே இந்தச் சலுகையைப் பெறுவதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


Pengarang :