ECONOMYSELANGOR

13.26 கோடி வெள்ளி வெள்ள உதவி நிதி மாவட்ட நில அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 16- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் இதுவரை 13 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரம் வெள்ளியைச் சிலாங்கூர் மாநில அரசு மாவட்ட நில அலுவலகங்களிடம் ஒப்படைத்துள்ளது.

அந்தத் தொகையில் 11 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மாவட்ட நில அலுவலகங்கள் பகிர்ந்தளித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எஞ்சிய தொகையான 1 கோடியே 43 லட்சத்து 78 ஆயிரம் வெள்ளி அந்த அலுவலகங்களின் வசம் இன்னும் இருப்பதாக மாநிலச் சட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இன்னும் எஞ்சியிருக்கும் 8,000 பேருக்கு வழங்க நமக்கு மேலும் 80 லட்சம் வெள்ளி தேவைப்படும். இந்தத் தொகையில் சிறிது மாறுபாடு காணப்பட்டாலும் 1 கோடியே 40 லட்சம் வெள்ளி மாவட்ட நில அலுவலகங்களின் கைவசம் இருக்கும் என்றார் அவர்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெட்டாலிங், கிள்ளான், உலு லங்காட், கோல லங்காட் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவி நிதியைப் பகிர்ந்தளிப்பதற்குப் போதுமான ஒதுக்கீடு நம்மிடம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

செமென்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டோரோயா அல்வியின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தது, ஒரே விண்ணப்பத்தைப் பல முறை அனுப்பியது போன்ற காரணங்களால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையைப் பகிர்ந்தளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இன்னும் வெள்ள உதவித் தொகையைப் பெறாதவர்களிடம் நிதியை ஒப்படைக்கும் நிகழ்வைப் பெரிய மண்டபங்களில் நடத்த மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்று  அவர் கூறினார்.


Pengarang :