ECONOMYSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெ.11.8 கோடி உதவி நிதி- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மார்ச் 16- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மாநில அரசு 11 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை வழங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்தின் வாயிலாக மொத்தம் 118,110 பேர் தலா 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றதாக அவர் சொன்னார்.

மேலும் இந்தப் பேரிடரில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்குத் தலா 10,000 வெள்ளி வீதம் மொத்தம் 140,000 வெள்ளி வழங்கப்பட்டதாக அவர்  தெரிவித்தார்.

 

தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களின் அடிப்படையில் எங்களுக்குக் கிடைத்த தரவுகளைக் காட்டிலும் இது 10 மடங்கு அதிகமாகும். அந்தத் தரவுகளின் படி 11,700 பேர் பாதிக்கப்பட்டதாக நாங்கள் கணித்திருந்தோம் என்றார் அவர்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று கோலக் கிள்ளான் உறுப்பினர் ஹஸ்மிஷாம் ஜமான் ஹூரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இதுவரை மூன்று மாவட்டங்களில் உதவி நிதி விநியோகம் முழுமை பெற்றுள்ளதாகக் கூறிய அவர், உலு லங்காட்டில் 7,840 பேரும் உலு சிலாங்கூரில் 94 பேரும் சபா பெர்ணாமில் 40 பேரும் உதவித் தொகையைப் பெற்றுள்ளனர் என்றார்.

கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 62,342 பேருக்கு உதவி நிதி வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் பெட்டாலிங் (22,342 பேர்), கோலச் லங்காட் (11,570 பேர்), சிப்பாங் (6,901 பேர்), கோல சிலாங்கூர் (5,975 பேர்), கோம்பாக் (1,060 பேர்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளி உதவித் தொகையும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10,000 வெள்ளியும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று மாநில அரசு கடநதாண்டு டிசம்பர் 21 ஆம் தேதி அறிவித்தது.


Pengarang :