ECONOMYNATIONAL

ஊழியர் சேம நிதியிலிருந்து வெ.10,000 மீட்க அரசாங்கம் அனுமதி

புத்ரா ஜெயா, மார்ச் 16- கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் மீளாமலிருக்கும் மலேசியக் குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் விதமாக ஊழியர் சேம நிதி வாரியத்திலிருந்து (இ.பி.எஃப்.) 10,000 வெள்ளி சிறப்பு நிதி மீட்புக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

வயது முதிர்ந்த காலத்தில் பயன்படக்கூடிய இந்தத் தொகையை மீட்பதற்கு அனுமதிக்கும் முடிவை எடுப்பதில் அரசாங்கம் சங்கடத்தை எதிர்நோக்கியதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

எனினும், நடப்புத் தேவை மற்றும் எதிர்காலச் சேமிப்பு ஆகிய இரு அம்சங்களுக்குச் சமவிகிதத்தில் தீர்வு காணும் இடைக்கால வழியாக இம்முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்சிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில் மலேசியக் குடும்பத்தில் பலர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டும் வேலை இழந்தும் இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.

ஊழியர் சேம நிதியிலிருந்து பணத்தை மீட்பது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டு இறுதி முடிவை எடுத்தது என்றார் அவர்.

எனினும், தங்களுக்கு அவசரத் தேவை இருந்தால் தவிரச் சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதைத் தவிர்க்கும்படி இ.பி.எஃப். சந்தாதாரர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பணத்தை மீட்கும் விஷயத்தில் தங்களின் எதிர்காலம் கருதிச் சரியான முடிவை அவர்கள் எடுப்பார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :