ECONOMYNATIONALSELANGOR

சி.எஸ்.ஆர். திட்டங்களை மேற்கொள்ள 1.8 கோடி வெள்ளி- எம்.பி.ஐ. ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 16- சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனச் சமூகக் கடப்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளச் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) 1 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சமய நிகழ்வுகள் மற்றும் டியூஷன் ராக்யாட் நிலையான நடவடிக்கைகளுக்காக 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சி.எஸ்.ஆர். திட்டங்கள் மந்திரி புசார் கழகத்தின் நிதி ஆற்றலைப் பொறுத்து மேற்கொள்ளப்படும் என்பதோடு அதற்கான ஒதுக்கீடு நிலையானதாகவும் இருக்காது. எனினும், சமூகக் கடப்பாட்டு திட்டங்கள் அடிப்படை வசதி திட்டங்களுடன் சமநிலையானதாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று உலு கிள்ளான் உறுப்பினர் சாஹாரி சுங்கிப் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்தாண்டில் சமூக நலத் திட்டங்கள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு எம்.பி.ஐ. 2 கோடியே 80 லட்சம் வெள்ளியைச் செலவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் சிலாங்கூர் பங்கிட் நிதித் திட்டத்திற்காகவும் எம்.பி.ஐ. 28 லட்சம் வெள்ளியைச் செலவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :