ECONOMYNATIONALSELANGOR

தஞ்சோங் காராங்-சபாக் பெர்ணம் சாலையைத் தரம் உயர்த்தும் பணி மார்ச் 26 இல் முற்று பெறும்

ஷா ஆலம், மார்ச் 16- தஞ்சோங் காராங் முதல் சபா பெர்ணம் வரையிலான கூட்டரசு சாலை 5 (எப்.ஆர்.5) பகுதியைத் தரம் உயர்த்தும் பணி இம்மாதம் 26 ஆம் தேதி முற்றுப்பெறும்.

மேற்கு கரை நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அந்த 52 கிலோ மீட்டர் பகுதியைத் தரம் உயர்த்தும் பணி மத்திய அரசினால் முழுமையாக மேற்கொள்ளப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

அந்தத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்வதால் கூடுதல் ஒதுக்கீடு எதனையும்  மாநில அரசு செய்யவில்லை. திட்டத்தில் கூடுதல் அம்சங்களைச் சேர்ப்பது தொடர்பில் பொதுப்பணி இலாகாவுடன் விவாதங்களில் மட்டும் மாநில அரசு பங்கு கொண்டது என்றார் அவர்.

அப்பகுதியில் விபத்துகளைக் குறைப்பதற்கு ஏதுவாகச் சாலைகளில் விளக்குகளை அமைப்பது மற்றும் வேகக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவது போன்ற பரிந்துரைகளை மாநில அரசு முன்வைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று சுங்கை பாஞ்சாங் உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தம்ரின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த கூட்டரசு சாலையைத் தரம் உயர்த்தும் பணியின் ஆகக்கடைசி நிலவரம் மற்றும் அத்திட்டத்திற்கான மாநில அரசின் ஒதுக்கீடு குறித்து முகமது இம்ரான் கேள்வியெழுப்பியிருந்தார்.

அவ்வட்டார மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநில அரசு தொகுதி சமூக சேவை மையத்துடன் இணைந்து விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும் என்று இஸாம் குறிப்பிட்டார்.


Pengarang :