ECONOMYSELANGOR

ரூமா இடாமான் திட்டத்தின் கீழ் 78,182 வீடுகள் நிர்மாணிக்கப்படும்- ரோட்சியா இஸ்மாயில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 18- மாநில மக்களுக்காக அடுத்த சில ஆண்டுகளில் மந்திரி புசார் கழக கழக (எம்.பி.ஐ.) ரூமா இடாமான் திட்டத்தின் கீழ் 78,182  வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று வீடமைப்பு நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

கடந்த  2020 மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக மூன்று மாவட்டங்களில் 4,819 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

கட்டுப்படி விலை வீட்டு நிர்மாணிப்பு ஊக்குவிப்புத் திட்ட முன்னெடுப்பின் வாயிலாக கட்டுமானத் துறையில் கோவிட்-19 பொருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சியை உறுதி செய்ய இயலும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2020 மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தால் பல திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமலிருக்கின்றன. இத்திட்டங்கள் இவ்வாண்டிலும் தொடரும் என்பதோடு அடுத்த சில ஆண்டுகளில் 44,304 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில வீடமைப்பு சொத்துடைமை கழகத்திடமிருந்து தாங்கள் 5,298 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக கூறிய அவர், தற்போது 4,819 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளையில் எஞ்சியவை தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படும் ரூமா ஹராப்பான் திட்ட வீடுகளைக் கொண்டு ஈடு செய்யப்படும் என்றார்.

மாநில சட்டமன்றத்தில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :