ECONOMYHEALTHNATIONAL

கலைஞர்களின் சுமையைக் குறைக்க பொழுதுபோக்கு துறைக்கு வரிச்சலுகை- மந்திரி புசார் கோடி காட்டினார்

ஷா ஆலம், மார்ச் 19- 2022 ஆம் ஆண்டு முழுமைக்குமான பொழுதுபோக்கு வரியை முழுமையாக ரத்து செய்வது அல்லது குறைப்பது குறித்து வரும் ஏப்ரல் முதல் தேதிக்கு முன்னதாக மாநில அரசு முடிவு செய்யும்.

இவ்விவகாரம் தொடர்பில் தரவுகள் மற்றும் விபரங்களைப் பெறுவதற்கு ஏதுவாக முன்கூட்டியே மாநில ஆட்சிக்குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நேரடி மேடை நிகழ்ச்சிகளை நடத்துவதில் உள்நாட்டு கலைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களை மாநில அரசு உணர்ந்துள்ளது. இறைவன் அருளால் அத்துறையினருக்கு நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்று அவர் சொன்னார்.

நமக்கு இரு வழிகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டிற்கான பொழுது போக்கு வரியை ஐந்து விழுக்காடாக குறைப்பது அல்லது முழுமையாக ரத்து செய்வது ஆகியவையே அந்த வழிகளாகும். எனினும் திரையரங்குகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றார் அவர்.

நாம் வசூல் செய்யும் ஒட்டு மொத்த பொழுதுபோக்கு வரியில் மேடை படைப்புகள் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, மாநிலத்தில் பொழுதுபோக்கு வரி வசூலிப்பு முறை  டிக்கெட் சார்ந்த மற்றும் டிக்கெட் அல்லாத இரு அம்சங்களை அடிப்படையாகக்  கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :