ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளப் பேரிடர்- மீட்பு பணிக்கு தேவையான சாதனங்களை வாங்க ஊராட்சி மன்றங்கள் ஊக்குவிப்பு

ஷா ஆலம், மார்ச் 19- பேரிடரை எதிர்கொள்வதற்கு ஏதுவாக படகுகள் மீட்பு சாதனங்கள் போன்ற பாதுகாப்பு தளவாடங்களை வாங்க ஊராட்சி மன்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

நெருக்கடியான நேரங்களில் குறிப்பாக வெள்ளப் பேரிடரின் போது ஊராட்சி மன்றங்கள் துரிதமாக செயல்பட இந்நடவடிக்கை உதவும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பேரிடர் அல்லது நெருக்கடியான சூழலை சிறப்பான முறையில் எதிர் கொள்வதற்கு ஏதுவாக பேரிடர் சார்ந்த விவகாரங்களை சரி செய்ய மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. பேரிடர் (டிசம்பர் மாத வெள்ளம்) மீண்டும் நிகழ்வதைக் காண நாம் விரும்பவில்லை என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஆகிய ஊராட்சி மன்றங்கள் இத்தகைய தளவாடங்களை வாங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

தேவைப்படும் போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை  பாதுகாப்பான இடத்தில் வைப்பதும் இந்த நடவடிக்கைளில் அடங்கும் என அவர் சொன்னார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதோடு பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


Pengarang :