ECONOMYNATIONAL

ஜசெகவின் புதிய தலைமைச் செயலாளராக அந்தோணி லோக் தேர்வு

ஷா ஆலம், மார்ச் 21- ஜசெகவின் புதிய தலைமைச் செயலாளராக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் சியு  ஃபூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இங்கு நடைபெற்ற ஜசெகவின் 17 வது பேராளர் மாநாட்டில் நடப்புத் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு பதிலாக அவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கட்சியின் அமைப்புச் செயலாளராக அந்தோணி லோக் இதற்கு முன்னர் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தலைமைச் செயலாளர் பொறுப்பை ஒருவர் மூன்று தவணைக்கு மேல் வகிக்க முடியாது என்று கட்சியின் சட்டவிதிகள் கூறுவதால் லிம் இம்முறை அப்பதவிக்கு போட்டியிடவில்லை.

முன்னதாக நடைபெற்ற கட்சியின் நிர்வாக மன்ற பதவிகளுக்கான போட்டியில் லோக் 1,625 வாக்குகள் பெற்று வாகை சூடினார். இப்போட்டியில் லிம்மிற்கு 1,311 வாக்குகள் கிடைத்தன.

இங்குள்ள ஐ.டி.சி.சி. மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 2,179 பேராளர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக மன்றத்தின் 30 பதவிகளுக்கு  நடைபெற்றத் தேர்தலில் மொத்தம் 92 பேர் போட்டியிட்டனர்.

முன்னதாக, இம்மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங், 56 ஆண்டுகால அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

இதனிடையே, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கட்சித் தேர்தலில் 1,782 வாக்குகள் பெற்று துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார்.

உதவித் தலைவர்களாக ஙா கோர் மிங், பினாங்கு முதலமைச்சர் சவ் குன் யோவ், ஸ்டெம்பின் சோங் சியேங் ஜென், எம்.குலசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Pengarang :