ECONOMYNATIONALSELANGOR

பயனீட்டாளர் மாதம்-  பல்வேறு பயனீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 21- பயனீட்டாளர் மாதத்தையொட்டி மாநில நிலையில் பல்வேறு பயனீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப்  பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

பயனீட்டாளர் என்ற முறையில் தங்களுக்கு உள்ள உரிமைகளைப் பொது மக்கள் அறிந்து கொள்ளச் செய்யும் நோக்கிலான இந்த இயக்கம் மாநில அரசு மற்றும் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த இயக்கத்தை முன்னிட்டு இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் டிரோலி சவால் போட்டி மாவட்ட நிலையில் நடத்தப்பட்டது. உள்நாட்டு பொருள்களை வாங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் போட்டியில் வென்றவர்கள் தேசிய நிலையிலான போட்டிக்குத் தேர்வு பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

பொது மக்களை எளிதில் அணுகி அவர்களுக்குப் பயனீட்டாளர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதே சமயம், இலக்கவியல் பயன்பாடு மீதான அறிவாற்றலையும் அவர்கள் பெற முடியும் என்றார் அவர்.

இங்குள்ள ஜ-சிட்டி சென்ட்ரல் பேரங்காடியில் நடைபெற்ற சிலாங்கூர் பயனீட்டாளர் விழாவைத் தொடக்கி வைத்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விழாவை முன்னிட்டுப் பயனீட்டாளர் இலக்கவியல் ஆய்வரங்கு இரு தினங்களுக்கு நடத்தப்பட்டது. மேலும்,  அதில் கண்காட்சி, வர்ணம் தீட்டும் போட்டி ஆகியவையும் இடம் பெற்றன.


Pengarang :