ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறவில்லை – சினோவேக் பெற்ற 20 லட்சம் பேர் முழு தடுப்பூசிக்கான தகுதியை இழக்கும் அபாயம்

ஷா ஆலம், மார்ச் 24- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கும் சினோவேக் தடுப்பூசி பெற்ற சுமார் 20 லட்சம் பேர் வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
சினோவேக் தடுப்பூசியைப் பெற்ற 20 லட்சத்து 9 ஆயிரம் பேர் இன்னும் ஊக்கத் தடுப்பூசியைப் பெறாமலிருக்கின்றனர். இன்னும் ஒரு வார காலத்தில் குறைந்தது 20 லட்சம் பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.

அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் சினோவேக் தடுப்பூசி பெற்றவர்கள் மார்ச் 1 தேதிக்கு முன்னதாக ஊக்கத் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யத் தவறினால் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழக்க வேண்டி வரும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்கள் ஊக்கத் தடுப்பூசியை பெறுவதற்கான காலக் கெடு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


Pengarang :