ECONOMYPENDIDIKANSAINS & INOVASI

சிலாங்கூர் டிஜிட்டல் பள்ளி ஆகஸ்டு மாதம் தொடங்கும்- முதல் கட்டமாக 200 மாணவர்கள் சேர்ப்பு

ஷா ஆலம், மார்ச் 25- சிலாங்கூர் டிஜிட்டல் பள்ளி (எஸ்.டி.எஸ்.) வரும் ஆகஸ்டு மாதம் செயல்படத் தொடங்கும். இப்பள்ளியில் முதல் கட்டமாக 200 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இப்பள்ளியில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கை 200 ஆக நிலைநிறுத்தப்பட்டு பின்னர் 400 ஆக உயர்த்தப்படும் என்று சிடேக் எனப்படும் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதார கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி யோங் காய் பிங் கூறினார்.

இந்த எஸ்.டி.எஸ். பள்ளி மூன்று மாத குறுகியகாலப் பயிற்சி, டிப்ளோமா மற்றும் இளங்கலை நிலையிலான பயிற்சிகளை வழங்குகிறது. இங்கு கல்வியை மேற்கொள்வோருக்கு வெ. 3,500 முதல் வெ. 35,000 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. பி.டி.பி.டி.என் எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகத்தில் வாயிலாகவும் கடனுதவி பெறலாம் என அவர் தெரிவித்தார்.

தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இலக்கவியல் துறையில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் இக்கல்வித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்.டி.எஸ். பள்ளி உருவாக்கம் தொடர்பில் யுனிவர்சிட்டி சிலாங்கூர் (யுனிசெல்) மற்றும் தி ஹிவ் ஆசியா தெங்காரா ஆகிய தரப்புகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

நாட்டில் இலக்கவியல் துறை துரித வளர்ச்சி கண்டு வருவதோடு அத்துறைக்கு 15 லட்சம் தொழிலாளர்களும் தேவைப்படுகின்றனர். எனினும் நம் வசம் 50 விழுக்காட்டு திறன்பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றார் அவர்.


Pengarang :