ECONOMYSELANGOR

நாட்டில் மந்தமாக செயல்படும் 947 ருக்குன் தெத்தாங்கா அமைப்புகள்- அமைச்சு தகவல்

அலோர்ஸ்டார், மார்ச் 27– நாடு முழுவதும் உள்ள பதிவு பெற்ற 8,330 ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளில் 974 மந்தமாகச் செயல்படுவதோடு தங்கள் பகுதியில் ஆக்ககரமான பங்கினை ஆற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு கூறியது.

எனினும், சம்பந்தப்பட்ட அந்த ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளின் பதிவை ரத்து செய்ய அமைச்சு திட்டமிடவில்லை என்றும் மாறாக, அந்த அமைப்புகளுக்கு மீண்டும் உத்வேகத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் சொன்னார்.

மந்தமாகச் செயல்படும் ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்படாது. அந்த அமைப்புகள் மீண்டும் துடிப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளின் தலைவர்களை அமைச்சரோ அல்லது தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சோ தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக வட்டார மக்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் வட்டார மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு மாவட்ட ஒற்றுமைத் துறை அதிகாரிக்கு உள்ளது என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த ருக்குன் தெத்தாங்கா திட்டம் 1,000 வீடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் அமைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதி மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கிலான இந்த அமைப்பில் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருப்பது கட்டாயமாகும்.


Pengarang :