ECONOMYNATIONAL

நாட்டின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த கூடுதலாக 60 குதிரைகள்

கோத்தா பாரு, மார்ச் 27– வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதையொட்டி எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அரச மலேசிய போலீஸ் படை கூடுதலாக 60 குதிரைகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த அந்த குதிரைகள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று புக்கிட் அமான் உள்நாட்டு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

தற்போது நாட்டில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள கூட்டரசு சேமப்படையின் கீழ் 40 குதிரைகளை அரச மலேசிய போலீஸ் படை கொண்டுள்ளது. கூடுதலாக தருவிக்கப்படும் இந்த குதிரைகள் அடுத்த மாதம் நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் போது கெடா மாநிலத்தின் புக்கிட் காயு ஸ்ரீ ஹீத்தாம் மற்றும் பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசாரில் பணியில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

நாட்டின் எல்லைகளில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பதில் உதவுவதற்கு ஏதுவாக குற்றச் செயல் தடுப்பு மற்றும் வழக்கமான ரோந்துப் பணி உள்பட பல்வேறு பணிகளுக்கு அந்த குதிரைகள் பயிற்றுவிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற பெங்காலான் செப்பா, 8வது பட்டாள வன போலீஸ் துறையின் ஓய்வு பெற்ற வீரர்களின் ஒன்று கூடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் குதிரைப் படை தவிர்த்து டிரோன், மோப்ப நாய்ப் பிரிவு மற்றும் இதர பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பும் பெறப்படும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :