ECONOMYSELANGOR

மறுசுழற்சித் திட்டங்களை பெ. ஜெயா மாநகர் மன்றம் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30- தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் மறுசுழற்சித் திட்டங்களை பல்வகைப் படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்வதில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கடப்பாடு கொண்டுள்ளது.

குப்பைகளை சேகரிப்பது மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்வது ஆகிய பணிகளுக்காக மாநகர் மன்றம் 8 கோடியே 50 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர் கூறினார்.

அத்தொகையில் 83 லட்சம் வெள்ளி குப்பைகளை அழிப்பதற்காக மட்டும் செலவிடப்பட்டது. இந்த செலவினம் 35 விழுக்காடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், மறுசுழற்சி விகிதத்தையும் மாநகர் மன்றம் தொடர்ந்து உயர்த்தி வரும் என்றார் அவர்.

இவ்வாண்டில் 30 விழுக்காட்டு குடும்பங்கள் இந்த மறுசுழற்சித் திட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம். வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் அனைத்து நிர்வாக பகுதிகளுக்கும் இது விரிவாக்கம் காணும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள எஸ்.எஸ்.8 இல் கேலேரியா பிஜே இக்கோ ரீசைக்கிளிங் பிளாசாவின் திறப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த பிளாசா மறுசுழற்சிப் பொருள்கள், சாதனங்கள் மற்றும் பட்டறை உபகரணங்கள் போன்ற மறுபயன்பாட்டிற்கு உகந்த பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த மையத்தில் கற்றல் வசதிகள், உணவு உள்ளிட்ட பொருள்களை மறுசுழற்சி செய்யும் வசதிகள் கருத்தரங்கு மற்றும் பயிற்சிக்கான அறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :