ANTARABANGSAECONOMY

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரிப்பு- அவசரகாலத்தை அறிவித்தார் அதிபர் ராஜபக்சே

கொழும்பு, ஏப் 2– பணவீக்கம், மின் தடை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளில் இலங்கை சிக்கித் தவித்து வரும் நிலையில் அந்நாட்டில் அவசரகால நிலையை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நேற்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கை நிலை நிறுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள் மற்றும் சேவைகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் அவசர காலம் பிரகடனப்படுத்தப்படுவதாக நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த அவசரகால நிலை வெள்ளிக்கிழமை தொடங்கி நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அவர் கூறினார்.

எரிபொருள், அந்நியச் செலாவணி மற்றும் மின்விநியோகப் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் அண்மைய சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்புவில் உள்ள ராஜ்பக்சே இல்லத்தின் முன் கூடிய பொதுமக்கள் நீண்ட நாட்களாக நீடித்து வரும் மின்தடை, உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும்படி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு நேற்று காலை  மீட்டுக் கொள்ளப்பட்டது.


Pengarang :