ECONOMYPENDIDIKAN

நெகிரி செம்பிலான் ஆக்கத்திறன் குழு மாநாட்டில் சிலாங்கூர் பொது நூலகத்திற்கு மூன்று விருதுகள்

ஷா ஆலம், ஏப்ரல் 4 – நெகிரி செம்பிலானில் நடைபெற்ற அகில மலேசிய நியூ ஹொரைசன் புத்தாக்க மற்றும் ஆக்கத்திறன் குழு மாநாட்டில் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பி.பி.ஏ.எஸ்.) மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

ஈஸி கோ குழுமத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநில பொது நூலகம் “புக்ஸ் பிளை டு யூ“ சேவையை அமல் செய்ததற்காக  திட்ட மேம்பாடு, சிறப்பு குழு நடுவர் விருது மற்றும் சிறந்த செயல்திறன் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிசுகளை வென்றது.

கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சிரம்பானில்  உள்ள ரோயாலி சூலான் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பொது நூலகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நூலகங்களைப் பிரதிநிதித்து மொத்தம் 15 குழுக்கள் பங்கேற்றதாக பி.பி.ஏ.எஸ். இயக்குநர் டத்தின் பாதுகா மஸ்துரா முஹமட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

துறைகளின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப்பட்டது.  இது மிகவும் திறமையான புதிய பணி நடைமுறைகளை அறிமுகப்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான்  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருனிடமிருந்து  4,500 வெள்ளி  ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் மற்றும் நினைவுத் தகடுகளை  சிலாங்கூர் பொது நூலகக் கழகம் பெற்றுக் கொண்டது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் எளிதான வகையில் புத்தகங்களை இரவல் பெறும் வகையில் இந்த புக்ஸ் பிளை டு யூ எனும் திட்டதை சிலாங்கூர் பொது நூலகம்  கடந்தாண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.


Pengarang :