ECONOMYNATIONAL

நோன்புப் பெருநாள் விற்பனையில் 20,000 போலி பொருள்கள்- உள்நாட்டு வணிக அமைச்சு பறிமுதல்

கோலாலம்பூர், ஏப் 5- உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் கோலாலம்பூர் கூட்டரசு பிரிவு கடந்த  மாதம் 29 ஆம் தேதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் போலியாக தயாரிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற நிறுவன முத்திரை கொண்ட 20,207 ஆடைகள் மற்றும் காலணிகள் கைப்பற்றப்பட்டன.

அந்த அசல் வர்த்தக முத்திரைக்கு உரிமை பெற்ற தரப்பினர்  செய்த புகாரைத் தொடர்ந்து மூன்று மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் ஒரு கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் அரிபின் சம்சுடின் கூறினார்.

ஒரு வாரம் காலமாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையைத் தொடர்ந்து இங்குள்ள ஜாலான் கெனாங்காவிலுள்ள மொத்த விற்பனை தொகுதி மற்றும் தாமான் கெஞ்சானாவில் உள்ள  கிடங்கு ஆகியவற்றில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த பொருள்கள் நோன்புப் பெருநாள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விநியோகிப்பாளரிடமிருந்து 30 வெள்ளிக்கு பெறப்படும் இப்பொருள்கள் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு 100 வெள்ளி முதல் 250 வெள்ளி விலையில் விற்கப்படுகின்றன என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :