ECONOMYNATIONAL

தொழிலாளர் பற்றாக்குறை- 24 மணி நேரம் செயல்பட முடியாத நிலையில் வர்த்தக மையங்கள்

கோலாலம்பூர், ஏப் 5- நாடு கடந்த வெள்ளிக்கிழமை எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு மாறிய போதிலும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக மையங்கள் 24 மணி நேரம் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.

பொது மக்கள் இரவு நேரங்களில் பொழுதைக் கழிப்பதற்கு உகந்த இடமாக விளங்கும் மாமாக் உணவகங்களில் பெரும்பாலானவை கூடுதல் பட்சம் அதிகாலை 2.00 மணி வரை மட்டுமே செயல்படுவது தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

கூடுதல் நேரம் செயல்படுவதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பாக நோன்பு காலத்தில் அதிக வரவேற்பு கிடைத்த போதிலும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான உணவக உரிமையாளர்களால் அதனை நடைமுறைப் படுத்த இயலவில்லை என்று மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரெஸ்மா) தலைவர் ஜவஹர் அலி தாய்ப் கூறினார்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் இத்தகைய உணவகங்களுக்கு வரவேற்பு இருப்பது உண்மைதான். இருப்பினும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பல ஊழியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதால் இத்துறையில் கடுமையான ஆள்பலப் பற்றாக்குறையை நாங்கள் எதிர்நோக்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள 9,000 சங்க உறுப்பினர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டினர் உணவகத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கத் துறைகளுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இதுநாள் வரை இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வைக் காண முடியவில்லை என்றார் அவர்.

ஆகவே, 24 மணி நேரம் செயல்படக்கூடிய உணவக உரிமையாளர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் தருவிப்பதற்கான நடைமுறைகளை அரங்கம் எளிதாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :