ANTARABANGSAECONOMY

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் மலேசியருடையது- போலீசார் உறுதிப்படுத்தினர்

கோலாலம்பூர், ஏப் 6– ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ், பாதர்ஸ்ட் அருகே கண்டெடுக்கப்பட்ட மனித உடல், ஒரு வருடத்திற்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் மலேசியருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 25 வயதுடைய சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்த அந்த நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புத் துறையின் இயக்குநர் டத்தோ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் கும்பல் ஒன்று அந்த ஆடவருக்கு அந்நாட்டில் பண்ணைத் தொழிலாளி வேலையை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கைக்காக அவர்கள் அரச மலேசிய போலீஸ் படையைத் தொடர்பு கொள்வர் என்றார்.

பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் தொடர்பிலான ஆருடச் செய்திகளை பரப்ப வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெக்கி காய் வோங் சோங் எனும் ஆடவரின் சடலத்தை இம்மாதம் 3 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் போலீசார் மீட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

 


Pengarang :