ECONOMYNATIONAL

நோன்புப் பெருநாளின் போது சாலைகளில் வாகன எண்ணிக்கை 47  லட்சமாக உயரும்

கோலாலம்பூர், ஏப் 6– அடுத்த மாதம் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் போது நாடு முழுவதும் உள்ள சாலைகளை சுமார் 47 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என மதிப்பிடப்படுவதாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ மாட் காசிம் கரீம் கூறினார்.

இந்த எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சாலைகளில் சீரான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அனைத்து மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் 6,559 போலீஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் விடுமுறை நீண்டதாக இருப்பது மற்றும் ஈராண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் பெருநாளை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது ஆகிய காரணங்களால் சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 இல் நாட்டின் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. கடந்தாண்டில் கூட நோய்த் தொற்றுடன் நாம் போராடிக் கொண்டிருந்தோம் என்றார் அவர்.

கடந்தாண்டில் 18 வது ஓப்ஸ் செலாமாட் இயக்கம் “பாதுகாப்பான வீடு, பாதுகாப்பாக இடத்தை அடைவோம்“ எனும் கருப்பொருளுடன் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வீடுகளில் திருட்டுச் சம்பவங்களை குறைப்பதையும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதையும் இந்த இயக்கம் நோக்கமாக கொண்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :