புத்ர ஜெயாவில் பெண் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை

புத்ரா ஜெயா, ஏப் 7- இங்குள்ள பிரிசிண்ட் 5, இக்குஸ்ட்ரியன் பார்க் பகுதியில் கடந்த மாதம் 26 ஆம் தேதி பெண்மணி ஒருவருக்கும் அவரின் முன்னாள் காதலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் கைகலப்பின் போது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ்ப் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

திருமணமான தனது முன்னாள் காதலருக்கும் தனக்கும் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது தொடர்பில் 29 வயதுடைய சம்பந்தப்பட்ட பெண் மார்ச் 27 ஆம் தேதி போலீசில் புகார் செய்துள்ளதாகப் புத்ரா ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசி ஏ.அஸ்மாடி அப்துல் அஜிஸ் கூறினார்.

இப்புகார் தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அப்பெண் சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கையைப் பெறும் நடவடிக்கையிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பெண்மணி ஒருவர் சம்பந்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குறைகூறல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இச்சம்பவம் மார் 26 ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண்ணுக்கும் அவரின் முன்னாள் காதலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு அவ்வாடவரால் தாம் தாக்கப்பட்டதாக அப்பெண் புகார் செய்துள்ளார்.

 


Pengarang :