NATIONAL

நோன்புப் பெருநாளின் போது காவல் துறையில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே விடுமுறை

கோலாலம்பூர், ஏப் 11- இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது பத்து விழுக்காட்டு அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு மட்டுமே விடுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைவரும் எல்லாவிதமான சாத்தியங்களையும் எதிர்கொள்ள முழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொது முடக்கம் காரணமாக கடந்த ஈராண்டுகளாக பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் இருந்தவர்கள் இம்முறை அதாவது வரும் ஏப்ரல் 30 முதல் மே 4 வரை நோன்பு பெருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வர் என்று புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையில் 26,000 அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் உள்ளனர். அவர்களில் பத்து விழுக்காட்டினருக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படும். அக்காலக்கட்டத்தில் நாட்டில் பெரி அளவில் பொது மக்களின் நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மற்றவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாது என்பதோடு இயற்கைப் பேரிடர் போன்ற எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்ள அவர்கள் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும். உடனடியாக பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக நாங்களும் தளவாடங்களை தயார் நிலையில் வைத்திருப்போம் என்றார் அவர்.

நோன்பு பெருநாள் சமயத்தில் தமது தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் எனக் கூறிய அவர், தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பொது மக்கள் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்வதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்றார்.


Pengarang :