ECONOMYNATIONAL

பி.கே.ஆர். தேர்தலில் மே 13 முதல் 20 வரை வாக்களிப்பு- ஜூன் 26 கட்சி மாநாட்டில் முடிவுகள் அறிவிக்கப்படும்

ஷா ஆலம், ஏப் 12– பி.கே.ஆர். கட்சியின் 2022/2025 ஆம் தவணைக்கான தேர்தல் வரும் மே மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை இரு பிரிவுகளாக நடத்தப்படும்.
மே 13 முதல் 17 வரை கட்சி பேராளர்கள் நேரடியாக வாக்களிக்கும் வேளையில் மே 18 முதல் 20 வரை இயங்கலை வாயிலாக வாக்களிப்பர்.

பி.கே.ஆர். கட்சித் தேர்தலை இம்முறை ஹைப்ரிட் எனப்படும் இரு வேறு முறைகளில் நடத்தவிருக்கிறோம். கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அடில் செயலியை பயன்படுத்தி இயங்கலை வாயிலாகவும் உறுப்பினர்களின் நேரடி பங்கேற்பின் மூலமாகவும் இத்தேர்தல் நடத்தப்படும் என்று கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

இயங்கலை வாயிலாக வாக்களிக்க ஒப்புக் கொண்ட பேராளர்கள் நேரடியாக வாக்களிக்க இயலாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இத்தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களின் பெயர்கள் வரும் ஜூன் மாதம் நடைபெறும் கட்சியின் பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம், கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் பெயர் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் அப்பிரிவுகளின் பேராளர் மாநாடுகளில் வெளியிடப்படும் என்றார் அவர்.

அடில் செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :