ECONOMYSELANGOR

பி.கே.ஆர். கட்சித் தேர்தல்- உதவித் தலைவர் பதவிக்கு ஐந்து இந்தியர்கள் போட்டி

ஷா ஆலம், ஏப் 12– பி.கே.ஆர். கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு ஐந்து இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். உதவித் தலைவர் பதவிக்கான நான்கு இடங்களுக்கு குறி வைத்துள்ள 17 வேட்பாளர்களில் இந்த ஐவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ், புக்கிட் செலாம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.சண்முகம், பேராக் மாநில பி.கே.ஆர். முன்னாள் துணைத் தலைவர் எம்.ஏ. தினகரன், முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன், கெஅடிலான் இளைஞர் பிரிவின் முன்னாள் உதவித் தலைவர் எஸ்.தீபன் ஆகியோரே உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அந்த ஐந்து வேட்பாளர்களாவர்.

பி.கே.ஆர். கட்சியின் 2022/2025 ஆம்  தவணைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஜலிஹா நேற்று வெளியிட்டார்.

கட்சியின் நடப்பு உதவித் தலைவரான தியான் சுவா இம்முறை போட்டியிடுவதில்லை என்று கடந்த மாதம் 27 ஆம் தேதி அறிவித்திருந்தார். மற்றொரு உதவித் தலைவரான நுருள் இஸா அன்வார் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பொறுப்பிலிருந்து விலகினார். ரபிஸி ரம்லி இம்முறை கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளார்.

கட்சித் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ள வேளையில் துணைத் தலைவர் பதவிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயிலும் முன்னாள் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லியும் போட்டியிடுகின்றனர்.

பி.கே.ஆர். மகளிர் பிரிவு தலைவர் பதவிக்கு மேலவை உறுப்பினரான செனட்டர் பாட்லினா சிடேக்கும் சிலாங்கூர் கெஅடிலான் தலைவரும் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினருமான ரோட்சியா இஸ்மாயில் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு முன்னாள் பட்டதாரி இயக்கவாதிகளான ஆடாம் அட்லி அப்துல் ஹலிம் மற்றும் ஃபாமி ஃபைசோல் ஆகியோர் குறி வைத்துள்ளனர்.


Pengarang :