ECONOMY

தப்பியோடிய சிறைக் கைதிகளில் ஒருவர் பிடிபட்டார்- மேலும் ஐவருக்கு வலை வீச்சு

ஜெலுபு, ஏப் 12 -ஜெலுபு சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகளில் ஒருவர்  இங்குள்ள கம்போங் பெத்தாசே தெங்காவில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் மரண தண்டனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் முகமது ஜைரிஸான் ஜைனால் (வயது 42) என்ற அந்த ஆடவர் மாலை 5.15 மணியளவில் மீண்டும் பிடிபட்டதாக ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. மஸ்லான் ஊடின் கூறினார்.

அந்த ஆடவர் வீடொன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அதன் உரிமையாளருக்குச் சொந்தமான புரோட்டோன் வீரா ரக காரை கொள்ளையிட்டுத் தப்பச் செல்ல முயன்ற வேளையில் பொது மக்கள் சுற்றி வளைத்து அவரைப் பிடித்ததாக ஜெலுபு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மலாக்கா, ஜாசினைச் சேர்ந்த அந்த ஆடவரை கைது செய்ததன் வழி இதுவரை பிடிபட்ட சிறைக்கைதிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

தப்பியோடிய முதல் நபர் ஜெலுபு சிறைச்சாலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோங்கோய் என்னுமிடத்திலுள்ள செம்பனைத் தோட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்றார் அவர்.

இன்னும் தலைமறைவாக இருக்கும் இதர ஐவரும் அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு கிராம எல்லைப்பகுதியில் இன்னும் மறைந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :