ECONOMY

பெண்ணின் உடல் பள்ளத்தாக்கில் கண்டுபிடிப்பு- விசாரணை அறிக்கை டி.பி.பி. யிடம் தாக்கல்

சிரம்பான், ஏப் 12– பாரோய், ஜாலான் லாமா புக்கிட் புத்தூஸ் சாலையின் 14வது கிலோமீட்டரில்  பள்ளத்தாக்கு ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் (டி.பி.பி.) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிரம்பான் மாவட்ட  போலீஸ் தலைவர் ஏசிபி நந்தா மாரோஃப்பை  பெர்னாமா தொடர்பு இன்று  கொண்டபோது இத்தகவலை அவர் உறுதிப்படுத்தினார்.

நாங்கள் விசாரணையை முடித்துவிட்டோம். இப்போது  டி.பி.பியின் அடுத்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம்  என்று அவர் கூறினார்.

கடந்த மார்ச் 20 ஆம் தேதியன்று உள்நாட்டவர் என நம்பப்படும் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த நபர் கண்டு போலீசுக்கு தகவல் அளித்தார்.

அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து  41 மற்றும் 44 வயதுடைய இரு ஆண்கள் மற்றும் 18 வயது பெண்ணை போலீசார் விசாரணைக்காக குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் தடுத்து வைத்துள்ளனர்.

41 மற்றும் 18 வயதுடைய இரு சந்தேக நபர்கள்  ஏப்ரல் 16  வரையிலும் மற்றொரு சந்தேக நபர் நாளை ஏப்ரல் 13 ஆம் தேதி வரையிலும் தடுத்து  வைக்கப்பட்டுள்ளதாக நந்தா தெரிவித்தார்.

இம்மாதம் 7 ஆம் தேதி இங்குள்ள தாமான் புக்கிட் ஜம்ருட்டில்  தண்ணீர் தொட்டிக்கு அருகில் உள்ள புதரில் ஐந்து வயது சிறுமியின் எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காகவும்  அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :