ECONOMYSELANGORSENI

“மலேசிய நாடாளுமன்றத்தில் விலங்குகள்“- ஓவியத்தை வாங்கினார் சிலாங்கூர் சுல்தான்

ஷா ஆலம், ஏப் 12– மலேசிய நாடாளுமன்றம் போன்ற தோற்றம் கொண்ட ஒரு இடத்தில் மிருகங்கள் குவிந்திருப்பதை சித்தரிக்கும் ஓவியம் ஒன்றை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வாங்கியுள்ளார்.

பிரசித்தி பெற்ற ஓவியர் பான்ஸ்கியின் 5 கோடி வெள்ளி மதிப்பிலான படைப்பின் சாயலை இந்த ஓவியம் கொண்டுள்ளது.

கலைப்படைப்புகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட சுல்தான் ஷராபுடினின் “கவனத்தை ஈர்த்த“ இந்த ஓவியம் தொடர்பான ஐந்து புகைப்படங்களை சிலாங்கூர் அரச அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தை வரைந்தவர் பெயர் மற்றும் அதன் தலைப்பு குறித்து அந்த பதிவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஓவியத்தை சுல்தான் தனது வாசிப்பு அறையில் மாட்டி வைக்கப்போவதாகவும் சமூக நலப் பணிகளுக்காக அதனை எதிர்காலத்தில் ஏலத்தில் விட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த பதிவு கூறியது.

நாடாளுமன்ற சபாநாயகர் அவைக்கு தலைமையேற்றுள்ளதை காட்டும் அந்த ஓவியம், அடிக்கடி கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் உள்ளதை சித்தரிக்கும் விதமாக தவளைகள் உள்ளிட்ட விலங்குகள் குவிந்துள்ளதைக் காட்டுகிறது.

இந்த ஓவியத்தில் காட்டப்படும் இடம் அப்படியே மலேசிய நாடாளுமன்றத்தை பிரதிபலிக்கிறது. எனினும், நாடாளுமன்ற சபாநாயகரின் படம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி புதிய சபாநாயகராக பொறுப்பேற்றப் பின்னர் டான்ஸ்ரீ அஸார் அஜிசான் ஹருண் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படத்தின் சாயலை இந்த ஓவியம் கொண்டுள்ளது.


Pengarang :