ECONOMYNATIONAL

கிழக்குக் கரை இரயில் திட்டம் 28.57 விழுக்காடு பூர்த்தி- 2026 ஆம் ஆண்டில் முழுமை பெறும்

கோத்தா பாரு, ஏப் 13- கிழக்கு கரை இரயில் திட்டம் (இ.சி.ஆர்.எல்.) இது வரை 28.57 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக எம்.ஆர்.எல். எனப்படும் மலேசிய ரயில் லிங்க் சென் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.

கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணிப்பு பணிகளும் இதில் அடங்கும் என்று நேற்று இங்கு ஊடகவியலாளர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் அவர் சொன்னார்.

மொத்தம் 665 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்ட இந்த இ.சி.ஆர்.எல். திட்டம் சீரான முறையில் மேம்பாடு கண்டு வருவதோடு வரும் 2026 ஆம் ஆண்டில் முழுமை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தை மேற்கொள்வதில் நாங்கள்  பெரிதாக பிரச்னைகளை எதிர்நோக்கவில்லை. இத்திட்டத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்து தரப்பினரின் குறிப்பாக மாநில அரசுகளின் ஒத்துழைப்பின் மூலம் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டன என்று அவர் சொன்னார்.

பகாங்கையும் சிலாங்கூரையும் இணைக்கும் 16.39 கிலோ மீட்டர் நீள கெந்திங் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சுரங்கப் பாதை பகாங் மாநிலத்தில் 10 கிலோ மீட்டரையும் சிலாங்கூரில் 2 கிலோ மீட்டரையும் கொண்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு 400 முதல் 600 மீட்டர் வரையிலான பகுதியை குடைய முடியும். இந்த சுங்கத்தை முழுமையாக குடைந்தெடுப்பதற்கு இரண்டரை ஆண்டுகள் பிடிக்கும் என்றார் அவர்.


Pengarang :