ECONOMYNATIONAL

நோன்பு பெருநாளின் போது ரோந்துப் பணியை போலீசார் தீவிரப்படுத்துவர்

கோலாலம்பூர், ஏப் 14- நோன்புப் பெருநாளை முன்னிட்டு குற்றச் செயல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரச மலேசிய போலீஸ் படை தனது அனைத்து ரோந்து கார் மற்றும் ரோந்து மோட்டார் சைக்கிள் பிரிவுகளையும் பணியில் ஈடுபடுத்தும்.

அடுத்த மாத தொடக்கத்தில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாள் மற்றும் தொழிலாளர் தின விடுமுறையைப் பயன்படுத்தி அதிகமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுவதாக புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் இயக்குநர் டத்தோ அய்டி இஸ்மாயில் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகள் மற்றும் மூடப்பட்டிருக்கும் வணிக மையங்களை இலக்காக கொண்டு ரோந்துக் கார் மற்றும் ரோந்து மோட்டார் சைக்கிள் பிரிவினர் விரிவான அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் சொத்துகளின்  பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கை மிக முக்கிய பங்கினை ஆற்றும் என்று அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் தங்களின் முகவரி, வெளியூரில் தங்கியிருக்கும் காலம், தொலைபேசி எண் போன்ற விபரங்களை அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

போலீசார் தங்கள் ரோந்து நடவடிக்கையை முன்கூட்டியே திட்டமிடுவதில் இந்த இந்த விபரங்கள் பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :