ECONOMYHEALTHNATIONAL

சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்குவது மே 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படும்

கோலாலம்பூர், ஏப் 14- பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை வழங்குவது வரும் மே 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படவுள்ளது.

மே மாதம் 15 ஆம் தேதிக்குப் பின்னர் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்படாது என்று துணை சுகாதார அமைச்சர் 1 டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் அதிகளவில் தடுப்பூசிகள் வீணாவதை கருத்தில் கொண்டு சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை குழு (சி.ஐ.டி.எஸ்-சி.) இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

உற்பத்தியாளர்களால் வெளியிடப்பட்ட ஆறு மாதத்திற்கு பிறகு சிறார்களுக்கான தடுப்பூசியை பயன்படுத்த முடியாது என்பதால்  முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்துவதற்கான இறுதி தேதியை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல் நேற்று முன்தினம் வரை 13 லட்சத்து 71 ஆயிரத்து 120 சிறார்கள் அல்லது 38.6 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 195,865 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

சிறார் தடுப்பூசி நடவடிக்கை குழுவின் இந்த முடிவைத் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசியை செலுத்துவதா? இல்லையா? என்பதை பெற்றோர்கள் வரும் மே 15 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :