ECONOMYSELANGOR

சிலாங்கூர் தொழில்திறன் மையம் ஷா ஆலமில் அமைக்கப்படும்- மந்திரி புசார் தகவல்

கோல சிலாங்கூர், ஏப் 14- சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டு மையத்தை (எஸ்.டி.டி.சி.) ஷா ஆலம், செக்சன் 7 இல் இவ்வாண்டு மத்தியில் மாநில அரசு தொடங்கவுள்ளது.

மாநிலத்திலுள்ள தொழில் துறைகளுக்கு தற்போது மிகவும் தேவைப்படக்கூடிய உயர் திறன்மிக்க மனித ஆற்றலை உருவாக்கும்  நோக்கில் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதை இந்த மையம் நோக்கமாக கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோல சிலாங்கூரில் உள்ள தொழில் திறன் மையம் தொடக்க நிலையிலும் அன்றாட தேவைகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. ஆனால் ஷா ஆலமில் அமைக்கப்படும் இம்மையம் தொழில் திறன் மற்றும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பயிற்சி வழங்கும் என்றார் அவர்.

இத்திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் தாங்கள் விவாதித்து வருவதாகவும் இதன் தொடர்பான முழு விபரங்கள் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் எஸ்.டி.டி.சி. மையத்தில் நேற்று 330 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் நோன்பு துறந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டு ஆதரவில் செயல்படும் தொழில் கல்வி மையமாக இந்த எஸ்.டி.டி.சி. விளங்குகிறது.

கோல சிலாங்கூரில் செயல்பட்டு வந்த அனைத்துலக இன்பென்ஸ்  கல்லூரி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எஸ்.டி.டி.சி என பெயர் மாற்றம் கண்டது.


Pengarang :