ECONOMY

தனேஷ் படுகொலை- நான்கு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஏப் 14– ஸ்ரீ கெம்பாங்கானில் இம்மாதம் 3 ஆம் தேதி நிகழ்ந்த படுகொலை தொடர்பில் நான்கு நண்பர்கள் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

எம். முகுந்தன் (வயது 33), எஸ். மாதவன் (வயது 40), ஏ.சந்திரமணி (வயது 35), எஸ். தர்மா (வயது 30) ஆகிய நால்வரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை வழங்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மாஜிஸ்திரேட் முகமது இஸ்கந்தார் ஜைனோல் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அக்குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக  அந்த நால்வரும் தலையை அசைத்தனர்.

இம்மாதம் 3 ஆம் தேதி அதிகாலை 5.27 மணியளவில் ஜாலான் பிஎஸ் 6/8, தாமான் புக்கிட் செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான் எனும் முகவரியில் எம். தனேஷ் (வயது 30) என்பவரை கூட்டாக கொலை செய்ததாக அந்நால்வர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கும் உட்பட்டதாக உள்ளதால் அந்நால்வரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை.

ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கை மாஜிஸ்திரேட் ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அரசு தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் சித்தி ஜூபைடா மாஹாட்ட வழக்கை நடத்துகிறார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.


Pengarang :