ECONOMYSELANGOR

ரமலான் சந்தையில் உரிமம் இன்றி வர்த்தகத்தில் ஈடுபட்டவருக்கு அபராதம்

ஷா ஆலம், ஏப் 15-  இங்குள்ள செக்சன் 19 ரமலான் சந்தையில் முறையான அனுமதியின்றி வர்த்தகம் புரிந்த ஆடவர் ஒருவருக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் அபராதம் விதித்தது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2007 ஆம் ஆண்டு அங்காடி வியாபார துணை சட்டத்தின் கீழ் அந்த வணிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்ற துணை டத்தோ பண்டார் ரஷிட் ருஸ்லான் கூறினார்.

இது தவிர, வணிகம் செய்யும் போது தொப்பி மற்றும் ஏப்ரன் அணியாதது, முட்டை உணவுப் பொருள்களை தரையில் வைத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக  15 வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வணிகர்கள் சுத்தத்தைப் பேணுவதிலும் விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுவாக இங்கு கடைபிடிக்கப்படும் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் குறித்து நாங்கள் மனநிறைவு கொள்கிறோம் என்றார் அவர்.

இவ்வாண்டு ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 22 ரமலான் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வாடிக்கையாளர்கள்  எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக எண் வரிசை முறை பின்பற்றப்படுகிறது.


Pengarang :