ECONOMYNATIONAL

மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்யும் நிபந்தனையைத் தளர்த்துவது தொடர்பில் ஓரிரு வாரங்களில் முடிவு

கோலாலம்பூர், ஏப் 15- பொது இடங்களில் நுழைவதற்கு முன் மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்யும் நிபந்தனையை தளர்த்துவது தொடர்பில் ஓரிரு வாரங்களில் முடிவெடுக்கப்படும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

நாட்டின் நடப்பு நிலவரங்களை குறிப்பாக ஒமிக்ரோன் அலையை தாண்டிய மற்றும் எண்டமிக் கட்டத்தை நோக்கிச் செல்லும் சூழலை கருத்தில் கொண்டு இவ்விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த நிலை மாற்றக் கட்டத்தைப் பொறுத்த வரையில், நோய்த் தொற்றின் நடப்பு நிலவரங்களைக் கருத்தில் கொண்டு நுண் அடையாள முறை தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறோமா அல்லது மைசெஜாத்ரா செயலியில் பதிவிடும் முறையை தளர்த்துவதற்கு துணிகிறோமா என்பதை தீர்மானிக்கவிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

நடப்பு நோய்த் தொற்று நிலவரங்களை சுகாதார அமைச்சு கண்காணித்து வருவதோடு பொது இடங்களில் மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்யும் நடைமுறையை தொடர்வதா என்பது குறித்து ஓரிரு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மைசெஜாத்ரா செயலியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்வது குறைந்து வருவது மற்றும் நடப்பு எண்டமிக் கட்டத்தில் அந்த நடைமுறையின் அவசியம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

நாடு தற்போது எண்டமிக் கட்டத்தை நோக்கி பயணித்தாலும் திறந்த வெளிகள் தவிர்த்து மற்ற இடங்களில்  மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்யும் நடைமுறை இன்னும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.


Pengarang :