ECONOMYNATIONAL

எல்லை கடந்த குற்றச் செயல்களைத் தடுக்கும் பணியில் 2,500 கடல்சார் அமலாக்கப் படையினர்

அலோர் காஜா, ஏப் 15– எல்லை கடந்த  குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கும்  பாகார் லாவுட் எனப்படும் “கடல் வேலி“ 1/2022 இரண்டாம் கட்டத் திட்டத்தில் மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் (ஏ.பி.எம்.எம்.) 2,500 உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அவர்களில் 500 பேர் சபா மற்றும் லாபுவான் கடலோர பகுதியிலும் 450 பேர் சரவாக் மாநிலத்திலும்  பணியில் ஈடுபடுத்தப்படுவர்  என்று ஏ.பி.எம்.எம்,மின் தளபதி டத்தோ முகமது ஜூபில் மாட் சோம் கூறினார்.

வரும் நோன்புப் பெருநாள் கடல் சார்ந்த குற்றச் செயல் அதிகரிப்புக்கு வழி வகுக்கும்என எதிர்பார்க்கிறோம். நாட்டின் எல்லைகள் கடந்த ஏப்ரல் 1 தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் கடல் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் நிகழ்வதை தடுப்பதற்காக வரும்  ஏப்ரல் 19 முதல் மே 17 வரை தீவிர அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கோல லிங்கியில் நடைபெற்ற ஏ.பி.எம்.எம். உறுப்பினர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 257 குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டதோடு 4 கோடியே 92 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இது தவிர, கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாகார் லாவுட் நடவடிக்கையில் 3 கோடியே 88 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டதோடு 21 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதக் குடியேறிகளின் நுழைவு, கள்ளத்தனமாக பொருள் கடத்தல், கெத்தும், கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :