ANTARABANGSAECONOMYNATIONAL

விமானக் கட்டண உயர்வு குறித்து விசாரணை நடத்தப்படும்- போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப் 15- பெருநாள் காலத்தின் போது விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி மலேசியா வான் போக்குவரத்து ஆணையம் (மாவ்கோம்) மற்றும் விமான நிறுவனங்களை போக்குவரத்து அமைச்சு பணித்துள்ளது.

இன்று தனது தலைமையில் மலேசியா வான் போக்குவரத்து ஆணையம், சிவில் வான் போக்குவரத்து அமைப்பு (சி.ஏ.ஏ.எம்.) மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.

பொதுமக்கள்  மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த கட்டண உயர்வு விவகாரத்திற்கு உடனடித் தீர்வு காணும்படி உள்நாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள விமான நிறுவனங்களை தாம் பணித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தீபகற்ப மலேசியாவுக்கும் சபா மற்றும் சரவாவுக்குமிடையிலான விமானக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது குறித்து பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர் என்றார் அவர்.

விமான நிலையங்களில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுச் சேவை நேரத்தை சி.ஏ.ஏ.எம். அதிகரித்துள்ளதோடு பெருநாள் காலத்தில் பயணச் சேவையை அதிகரிப்பது குறித்து திட்டமிடும்படி விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கியுள்ள சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக விமானக் கட்டணங்களை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :