ECONOMYNATIONALSELANGOR

பெருநாள் கால விலைக்கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான பொருள்களின் பட்டியல் மறுஆய்வு

கோலாலம்பூர், ஏப் 15- பெருநாள் கால விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு மறுஆய்வு செய்யவுள்ளது.

இதன் வழி, நோன்புப் பெருநாளுக்கான விலை உச்சவரம்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பொருள்களின் எண்ணிக்கை குறைவதற்கு அல்லது உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

எனினும், நோன்புப் பெருநாளுக்கு தேவைப்படும் பொருள்களின் அடிப்படையில் அந்த பட்டியல் அமையும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தற்போது கோழி மற்றும் முட்டையை விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் வைத்துள்ளோம். நோன்புப் பெருநாள் நெருங்கும் சமயத்தில் மேலும் சில பொருள்களை அப்பட்டியலில் சேர்க்கவுள்ளோம். இதன் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று, இங்குள்ள மெனாரா எஸ்.எஸ்.எம்.மில் நடைபெற்ற மலேசிய நிறுவன ஆணையத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

வரும் நோன்புப் பெருநாளின் போது விமான மற்றும் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படும் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் போக்குவரத்து அமைச்சுடன் ஒத்துழைக்க தமது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :