ECONOMYSELANGOR

வரும் 2028 இல் கிள்ளான் பள்ளத்தாக்கில் நீரின் தரம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருக்கும்

ஷா ஆலம், ஏப் 21- வரும் 2028 ஆம் ஆண்டுவாக்கில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான தரத்திலான நீரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா மக்களுக்கு வழங்க பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதிய நீர் சுத்திகரிப்பு மையங்களை நிர்மாணிப்பதற்கும் பழைய குழாய்களை மாற்றுவதற்கும் தேவைப்படும் முதலீடுகள் தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் இந்த இலக்கை அடைய முடியும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தரமானதாக இருந்தாலும் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுக்கு இணையான தரத்தை கொண்டிருக்க நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற “சுத்தமான நீர்- கட்டண மறுசீரமைப்பு பொருத்தமானதா?“ எனும் தலைப்பில் இயங்கலை வாயிலாக நடைபெற்ற விவாத நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பழைய குழாய்கள் மற்றும் பழுதடைந்த சாதனங்களை மாற்றுவதற்கும் புதிய நீர் சுத்திகரிப்பு மையங்களை நிர்மாணிப்பதற்கும் பெரும் தொகை தேவைப்படும் காரணத்தால் குடிநீர்க் கட்டண மறுசீரமைப்பு அவசியமாவதாக கூறிய அவர், எனினும் அந்த கட்டண உயர்வு பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் இருக்கும் என்றார்.

சிலாங்கூர் அரசு அமல்படுத்தி வரும் டாருள் ஏசான் நீர் விநியோகத் திட்டத்தின் வாயிலாக உதவித் தொகை வழங்கப்படுவதை போன்ற ஏழைகளை இலக்காக கொண்ட உதவித் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

குடிநீர்க் கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில் இந்த உதவித் தொகை திட்டம் மத்திய அரசாங்க நிலையிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கூறிய அவர், ஒரு கன மீட்டர் நீருக்கான 3.00 வெள்ளி கட்டணத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் வேளையில் பயனீட்டாளர்கள் ஒரு கன மீட்டருக்கு வெ.1.50 மட்டுமே கட்டணமாக செலுத்துகின்றனர் என்றார்.


Pengarang :