ECONOMYSELANGOR

மாற்றுத் திறனாளி சிறார்களுக்காக பிரத்தியேக விளையாட்டு பூங்கா- எம்.பி.எஸ்.ஜே நிர்மாணிப்பு

சுபாங் ஜெயா, ஏப் 22- மாற்றுத் திறனாளி சிறார்களுக்காக பிரத்தியேக வசதிகளை உள்ளடக்கிய மூன்று விளையாட்டு பூங்காக்களை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நிர்மாணிக்கிறது.

யு.எஸ்.ஜே. 11/5 தாமான் அவாம், பிபி 22, ஜாலான் பிங்கிரான் புத்ரா மற்றும் ஜாலான் தெம்புவா 9, பூச்சோங் ஜெயா ஆகிய இடங்களில் அந்த  பிரத்தியேக வசதிகளை உள்ளடக்கிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று டத்தோ பண்டார் டத்தோ  ஜோஹாரி அனுவார் கூறினார்.

இந்த மூன்று பிரத்தியேக பூங்காக்களை அமைக்க 180,000 வெள்ளி செலவு பிடித்துள்ளது. சுபாங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் அமைக்கப்படும் முதலாவது பிரத்தியேக திட்டம் இதுவாகும். சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத் திறனாளி சிறார்கள் மற்றும் அவர்களை அழைத்து வருவோரின் வசதிக்காக மிகவும் விசாலமான இட வசதி உள்ள இடத்தில் பொது பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்தோம் என்றார் அவர்.

பொழுது போக்கு பூங்காக்களில்  உள்ள வசதிகளை மாற்றுத் திறனாளி சிறார்களும் அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இந்த விளையாட்டு மைதானத்தை மாநகர் மன்றம் அமைக்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.

சுபாங் ஜெயா மாநகர் மன்ற நிலையிலான 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக ஆட்டிஸம் தினத்தையொட்டி இங்குள்ள யு.எஸ்.ஜே. 11/5 பிரத்தியேக விளையாட்டு பூங்காவை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பூச்சோங் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கனில் மேலும் இரு இத்தகைய விளையாட்டு பூங்காக்களை நிர்மாணிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :