ECONOMYNATIONAL

மூன்று முக்கிய எஸ்.ஒ.பி. விதிகளில் தளர்வு- அரசாங்கம் பரிசீலனை

சிரம்பான், ஏப் 23- கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுப்பதற்கான மூன்று முக்கிய நிலையான நிர்வாக நடைமுறைகளில் (எஸ்.ஒ.பி.) தளர்வுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் நுழைவதற்கு முன் மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்வது மற்றும் கோவிட்-19 தடுப்பு சோதனை மேற்கொள்வது ஆகிய அந்த மூன்று விதிகளுக்கான தளர்வு குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இவ்விவகாரம் இன்னும் சுகாதார அமைச்சு நிலையில் இன்னும் விவாதிக்கப்பட்டும் மதிப்பீடு செய்யப்பட்டும் வருவதாக அவர் சொன்னார்.

விரைவில் நாங்கள் நல்ல செய்தியை அறிவிப்போம். எஸ்.ஒ.பி. விதிகளில் தளர்வுகளை அறிவிக்கும் பட்சத்தில் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள். முகக் கவசம் அணியும் விஷயத்தை பொறுத்தவரை அதன் சாதக பாதகங்களை ஆழ்ந்து பரிசீலிக்க விரும்புகிறோம் என்றார் அவர்.

பொது இடங்களில் அல்லது விமான நிலையங்களில் மைசெஜாத்ரா செயலியில் ஸ்கேன் செய்வதா? வெளிநாடுகளிலிருந்து திரும்பும் போது பிசிஆர் அல்லது ஆர்டிகே சோதனைகளை மேற்கொள்வதா? என்பது குறித்து சுகாதார அமைச்சு இன்னும் பரிசீலித்து வருகிறது என்று இங்குள்ள சமூக நல இல்லத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

எஸ்.ஒ.பி. விதிகளை அதிகமாக தளர்த்தும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பொதுமக்களின் கவலையையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்றார் அவர்.


Pengarang :