ANTARABANGSAMEDIA STATEMENT

நாகேந்திரனுக்குத்  தூக்கு – முடிவைத் தற்காத்தது சிங்கப்பூர்

சிங்கப்பூர், ஏப் 28- மரண தண்டனை அமலாக்கத்திற்கு எதிராக அனைத்துலக நிலையில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் ஒருவருக்கு  தூக்குத் தண்டனை நிறைவேற்றிய தனது முடிவை சிங்கப்பூர் தற்காத்தது.

சிங்கப்பூருக்கு 42 கிராம் ஹெரோயினை கடத்திய குற்றத்திற்காக நாகேந்திரன் தர்மலிங்கம் (வயது 34) என்ற ஆடவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

உலகில் மிகக் கடுமையான போதைப் பொருள் தடுப்புச் சட்டங்களைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது. அறிவுசார் மாற்றுத் திறனாளியான நாகேந்திரனை  தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டங்களும் முறையீடுகளும், மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் சிங்கப்பூர் அரசின் உறுதியான நிலைப்பாட்டின் முன் பலனற்றுப் போனது.

நாகேந்திரனின் ஐ.கியூ. எனப்படும் அறிவுத் திறன் 69 என்ற அளவில் உள்ளதை வழக்கறிஞர்களும் சமூக இயக்கவாதிகளும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த அளவு அறிவுசார் குறைபாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நாகேந்திரனின் முடிவு திட்டமிடப்பட்டும், நோக்கத்துடனும் எடுக்கப்பட்ட ஒன்று என்பதோடு தாம் என்ன செய்கிறோம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதை நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது என்று சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் தடுப்பு மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.

நாகேந்திரனுக்கு நியாயமான சட்ட உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் கடந்த 11 ஆண்டு காலத்தில் சட்டத்தின் கீழுள்ள அனைத்து வழிகளும் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் அந்நாட்டின் சட்டத் துறை தலைவர் அலுவலகம் மற்றொரு அறிக்கையில் தெரிவித்து.

இந்த வழக்கு அனைத்துலக நிலையில் கவனத்தை ஈர்த்தது. அவருக்கு எதிரான மரண தண்டனையை நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிராட்சன் உள்ளிட்டவர்கள் குரல் எழுப்பியிருந்தனர்.


Pengarang :