ECONOMYNATIONAL

கடப்பிதழ் விண்ணப்பம் அதிகரிப்பு- இணைய முன்பதிவு முறையை ரத்து செய்தது குடிநுழைவுத் துறை

புத்ரா ஜெயா, ஏப் 29- இணையம் வழி வருகைக்கான முன்பதிவு செய்யும் நடைமுறையை (எஸ்.டி.ஒ.) குடிநுழைவுத் துறை அகற்றியுள்ளதோடு கடப்பிதழ் விநியோக மற்றும் முகப்பிட சேவை நேரத்தையும் நீட்டித்துள்ளது.

அனைத்துலக கடப்பிதழுக்கு புதிதாக விண்ணப்பம் செய்வோர் மற்றும் புதுப்பிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு குடிநுழைவுத் துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியில் உள்ள அனைத்து கடப்பிதழ் விநியோக அலுவலகங்களிலும் வரும் மே மாதம் 9 ஆம் தேதி தொடங்கியும் கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர் பாரு, புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய இடங்களிலும் மே 16 ஆம் தேதி முதற்கொண்டும் எஸ்.டி.ஒ. முறை அகற்றப்படும் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைரு ஸைமி டாவுட் கூறினார்.

எஸ்.டி.ஒ. முறையின் கீழ் வருகைக்கான முன்பதிவு தேதியைப் பெற்றவர்கள் வரும் 16 ஆம் தேதிக்குப் பின்னர் அதனைப் பின்பற்றத் தேவையில்லை என்று அவர்  அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரா ஜெயா, ஜோகூர் பாரு, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய இடங்களில் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகங்கள் வரும் மே 14 ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 8.00  மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :