ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் வெள்ளிக்கிழமை முதல் வாகனப் போக்குவரத்து  அதிகரிக்கும் – காவல் துறை கணிப்பு

ஷா ஆலம், மே 5- வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி சிலாங்கூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என மாநில காவல் துறை கணித்துள்ளது.

ஆகவே, சாலையை கவனமாகப் பயன்படுத்தும் அதேவேளையில் பொறுமை காக்கும்படியும் வாகனமோட்டிகளை மாநில போக்குவரத்து குற்ற விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்மான் ஷாரியாட் கேட்டுக் கொண்டார்.

சாலைகளில் இப்போதே வாகன எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.

நெடுஞ்சாலைகளில் இடது தடத்தைப் பயன்படுத்தும் அதே வேளையில் வாகனமோட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும் அவர் வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறினார்.

இவ்வாண்டுப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட 2022 ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டை விட குறைவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம்  ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 2,110 விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளையில் இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 7.9 விழுக்காடு குறைந்து 1,943 ஆக குறைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இக்காலக்கட்டத்தில் மரண விபத்துகள் மற்றும் விபத்துகளால் நேர்ந்த மரணங்களின் எண்ணிக்கையும் 33.3 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 16 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இவ்வாண்டில் 11 ஆக குறைந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :