ECONOMYNATIONAL

வார இறுதியில் 45 லட்சம் வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்தும்- போலீசார் கணிப்பு

கோலாலம்பூர், மே 6– நோன்புப் பெருநாள் முடிந்த நிலையில் நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் 45 லட்சம் வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் தலைநகர் திரும்புவதால் நாளை முதல் சாலைகளில் போக்குவரத்து கணிசமான அளவு அதிகரிக்கும் என்று  புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்கத் துறையின் உதவி தலைமை  இயக்குநர் சூப்ரிண்டெண்டன் பக்ரி ஜைனால் அபிடின் கூறினார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் மட்டும் 12 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 47 லட்சம் வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ மாட் காசிம் கரீம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

சாலைகளில் சீரானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அனைத்து மாநில மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த 6,559 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :