ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முதலாவது சிலாங்கூர் திட்டம் மாநில மக்களின் பொருளாதார உயர்வுக்கு உதவும்- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 8- பரிவுமிக்க அரசாங்க கோட்பாட்டின் அடிப்படையில் மாநில மக்களின் சமூக பொருளாதார கொள்கையை வெற்றியடையச் செய்யும் நோக்கில் முதலாவது சிலாங்கூர் திட்டம் வரையப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பல்வேறு துறைகளை பெரிதும் பாதித்த கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் மாநில அரசுக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் விரிவான திட்டமிடலுடன் இந்த ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின்  பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிந்திப்பதற்கும் மறுஆய்வு செய்வதற்குரிய கட்டாயத்தை இந்த பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு காகாசான் கித்த செமுவா கெடிலான் எனும் இயக்கத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாதம் 300 வெள்ளி உதவித் தொகை வழங்க வகை செய்யும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் குடும்ப நல்வாழ்வுத் திட்டம் தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை மாநில அரசு தீவிரமாக அமைல்படுத்தி வருவதாகவும் அவர்  சொன்னார்.

மாநில அரசின் சேஹாட் சிலாங்கூர் இல்திஸாம் மற்றும் சேஹாட் சிலாங்கூர் சாரிங்கான் போன்ற திட்டங்கள் கடுமையான நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை மக்களுக்கு வழங்குகிறது என்றார் அவர்.

மாநில மக்களைச் சந்திப்பதற்காக தாம் வரும் ஜூன் மாதம் அனைத்து மாவட்டங்களுக்கும் சிலாங்கூர் பரிவு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறிய அவர், இப்பயணத்தின் போது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் அதேவேளையில் தகுதியுள்ள தரப்பினருக்கு உதவிகளையும் வழங்கவுள்ளதாக சொன்னார்.


Pengarang :