ECONOMYNATIONAL

போக்குவரத்து குற்றங்களுக்காக 16,377 குற்றப்பதிவுகள் வெளியீடு- ஜே.பி.ஜே. தகவல்

தும்பாட், மே 9– கடந்த ஏப்ரல் 29 முதல் மே 8 வரை மேற்கொள்ளப்பட்ட நோன்புப் பெருநாள் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக நாடு முழுவதும் 16,377 குற்றப்பதிவுகளை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) வெளியிட்டது.

இக்காலக்கட்டத்தில் மொத்தம் 89,490 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஜைலானி ஹஷிம் கூறினார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது ஐந்து முக்கிய குற்றங்களுக்காக சோதனைக்கு உட்படுத்தக் கோரும் 776 பி22 குற்றப்பதிவு அறிக்கைகளும் வெளியிடப்பட்டதாக அவர் சொன்னார்.

சிவப்பு சமிக்ஞை விளக்குகளைச் மீறிச் செல்வது, இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்வது, அவசரத் தடத்தை பயன்படுத்துவது, வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துவது, வேக வரம்பை மீறுவது ஆகியவையே அந்த ஐந்து குற்றங்களாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஐந்து குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்படாது, மாறாக சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றார் அவர்.
நேற்றிரவு இங்குள்ள ஜாலான் கோத்தா பாரு- பாசீர் பெக்கான் சாலையில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பு சோதனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள அவாஸ் எனப்படும் 45 தானியங்கி விழிப்புணர்வு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வேகக் கட்டுப்பாட்டை மீறிய 58,182 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :