MEDIA STATEMENT

 மனைவியைக் கொலை செய்ததாக மெக்கானிக் மீது குற்றச்சாட்டு

காஜாங், மே 9- செராசிலுள்ள தனது வீட்டில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளன்று தன் மனைவியைப் படுகொலை செய்ததாக மெக்கானிக் ஒருவர் மீது இங்குள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த மே 1 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கும் விடியற்காலை 3.30 மணிக்கும் இடையே செராஸ், தாமான் மாஜூ ஜெயாவிலுள்ள வீடொன்றில் சித்தி நடிரா முகமது நஸ்ருள் (வயது 28) என்பவரை படுகொலை செய்த குற்றச்சாட்டை முகமது ஷியாவல்லுடின் இஸ்மாயில் (வயது 38) என்ற அந்த ஆடவர் எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக முகமது ஷியாவல்லுடின் தலையை அசைத்தார். கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கே உள்ளதால் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக வழக்கை மாஜிஸ்திரேட் வரும் ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வேறொரு பெண்ணுடன் தமக்கு உள்ள தொடர்பை சமூக ஊடகங்கள் வாயிலாக சித்தி நடிரா அம்பலப்படுத்தியதால் கோபமடைந்த அவ்வாடவர் அவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அத்தாக்குதல் காரணமாக அப்பெண் உயிரிழந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :