ECONOMYHEALTHNATIONAL

சுகாதார அமைச்சு கணித்தது போல் பெருநாளுக்குப் பின் கோவிட்-19 எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், மே 10– சுகாதார அமைச்சு கணித்ததைப் போலவே நோன்புப் பெருநாளுக்கு ஒரு வாரம் கழித்து கோவிட்-19 எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.

ஆயினும், குறிப்பிட்ட காலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களுக்கு பொதுமக்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

நாம் எதிர்பார்த்த து போலவே ஷவால் மாதத்தின் முதல் வாரத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை சிறிது உயர்வு கண்டுள்ளது. நோய்த் தொற்று உச்சம் காணும் மற்றும் வீழ்ச்சி காணும் சூழலுக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நோய்த் தாக்கம் குறைவாக இருக்கும் வரை நாம் எண்டமிக் கட்டத்தைத் தொடரலாம் என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோன்புப் பெருநாளுக்குப் பிறகு கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்வு காணும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கடந்த 2 ஆம் தேதி கூறியிருந்தார்.

எனினும், அவற்றில் பெரும்பாலும் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை மட்டுமே கொண்டிருக்கும் என அவர் சொன்னார்.

நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை அண்மைய சில தினங்களில் இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் 2,153 சம்பவங்களும் நேற்று 2,246 சம்பவங்களும் பதிவாகின.


Pengarang :